Saturday 21 June 2014

undefined




நாட்டின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. நாள் தோறும் பொருளாதாரத் தேவைகளுக்காக நகரத்திற்கு வந்திறங்கும் மக்களின் சதவிகிதமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதுபோலவே நகரின் இடநெருக்கடியும் வளர்ந்துகொண்டே போகிறது. ஆட்கள் வந்து குடியேறக் குடியேறச் சென்னையும் தன்னை விஸ்தரித்துக்கொண்டாலும் எல்லோருக்குமான நிம்மதியாக வாழ ஓர் இடம் வேண்டும். ஆனால் வாடகை வீட்டில் அந்த நிம்மதி கிடைக்காது. அது உண்டு உறங்குவதற்கான இடமாகத்தான் பார்க்கப்படுகிறது. அசலான வாழ்க்கை சொந்த வீட்டில்தான் இருக்கிறது. ஆனால் மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் சொந்த வீடு என்பது நடுத்தரமக்களைப் பொறுத்தவரை நிறைவேற முடியாத கனவுதான். சுதந்திர இந்தியாவில் 75-ம் ஆண்டுக் கொண்டாட்டத்திற்குள் குறைந்தபட்ச வீட்டுத் தேவை பூர்த்திசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான முஸ்தீபுகள் இப்போதே தொடங்கிவிட்டன எனலாம். பல முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் அதிரடித் திட்டங்களுடன் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆம்! பத்து லட்சத்திலிருந்து அட்டகாசமான பட்ஜெட் வீடுகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளன. இந்தியாவின் முன்னணிக் கட்டுமான நிறுவனங்களான மகேந்திரா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம், டாட்டா ஹவுஸிங் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், உஷா பிரேக்கோ ரியாலிட்டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பட்ஜெட் வீடுகளை உருவாக்கும் திட்டத்தில் களமிறங்க உள்ளன.
மும்பையிலும் சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும். இதைத் தொடர்ந்து வெவ்வேறு நிறுவனங்கள், இதே மாதிரியான பட்ஜெட் வீடு திட்டத்தை இந்தியாவின் பல நகரங்களிலும் முன்னெடுக்கக் கூடும்.
முதற்கட்டமாக மகேந்திரா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் மும்பையின் புறநகர்ப் பகுதியான போயிசரில் பட்ஜெட் வீடுகளைக் கட்ட ஆரம்பித்துள்ளது. அந்தத் திட்டத்தில் இன்னொரு கட்டமாக சென்னையில் ஆவடிப் பகுதியில் பத்து லட்சத்திலிருந்து 20 லட்சத்திற்குள் வீடுகளைக் கட்டவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. Happinest என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் 420 - 600 சதுர அடிகள் கொண்ட வீடுகளை இந்நிறுவனம் கட்டவுள்ளது.
தமிழ்நாட்டையும் மகாராஷ்டிராவை யும் தேர்வுசெய்தது தற்செயலானது அல்ல. இந்த இரு மாநிலங்களும் தொழில் வளர்ச்சியுள்ள மாநிலங்கள். மேலும் இந்த இரு மாநகரங்களிலும் வீட்டுத் தேவை பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகேந்திரா லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரத்திற்குட்டப்பட்ட மாத வருமானம் கொண்ட குடும்பத்தினர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கும். அவர்களைக் குறி வைத்தே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் சென்னைப் புறநகர்ப் பகுதியான ஆவடியில் 13 ஏக்கரில் பரப்பளவில் இந்தத் திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்படும். மும்பையில் ஆகஸ்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 15 ஏக்கரில் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த இரு கட்டுமானத்தின் மூலம் மொத்தம் 2500 வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின்படி குறைந்த இடத்தில் வசதியான வீடுகள் ஏற்படுத்தித் தரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நகருக்கு வெளியே அமைய உள்ள திட்டமாக இருந்தாலும் போக்குவரத்து வசதிகளைத் தங்கள் நிறுவனம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். அதாவது கட்டிடம் அமையவுள்ள இடத்தில் இருந்து குறைந்தது 4 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடுகள் 9 மாத கால இடைவெளிக்குள் கட்டி முடித்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த ஒவ்வொரு திட்டத்திலும் 1200-ல் இருந்து 1500 வீடுகள் வரை கட்டப்படும். இந்தத் திட்டங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் இது ரியல் எஸ்டேட் துறையில் பெரும் புரட்சியை உண்டுபண்ணும்.

No comments:

Post a Comment