Tuesday 24 June 2014

கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்

கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்



பழைய கட்டிடங்களில் சிறப்பைப் பற்றி நாம் வியந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பல காலம் ஆகும். இப்போது அதே உறுதியுடன் குறைந்த கால அவகாசத்தில் கட்டிடங்களை மிக விரைவாகக் கட்டிவிட முடியும் அதுவும் முன்பைவிட குறைந்த விலையில். அவ்வளவு புதிய புதிய தொழில்நுட்பங்கள் கட்டுமானத் துறையில் அறிமுகமாகி வருகின்றன. இம்மாதிரியான ஒரு தொழில்நுட்பம்தான் ரெடிமேட் ஸ்டீல். இவ்வகை தொழில்நுட்பம் சமீபத்தில் வெற்றிகரமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரெடிமேட் சிமெண்ட் கலவை குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். “Ready Mix Concrete Cement’ என்ற பெயரில் நகரத்தில் அடிக்கடி தென்படும் வாகனத்தையும் நாம் பார்த்திருப்போம். பழைய காலத்தைப் போல சிமெண்ட்டையும் மண்ணையும் சரியான விகிதத்தில் கலந்து, பின் அதைப் பில்லரில் ஊற்றிப் பூச வேண்டும். இது ஒன்றும் இத்தனை எளிய காரியம் அல்ல. அதற்கு முன்பு ஆற்று மணலைத் தெளிக்க வேண்டும். தெளித்த மணலை அள்ளி சிமெண்ட்டுடன் நீர் ஊற்றிக் குழைக்க வேண்டும். குழைத்ததை அள்ளி எடுத்துச் செல்ல ஒருவர் வேண்டும். இப்படி அதிக மனித உழைப்பையும், காலத்தையும் கோரும் வேலைகளுக்கு மாற்றாக ரெடி மிக்ஸ் சிமெண்ட் வந்தது. இது முக்கியமாகப் பெரிய கட்டிடங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது.
இந்த மாதிரி தேவையில்லாத வேலையாட்களையும் காலத்தையும் குறைக்கும் பொருட்டு வந்துள்ள தொழில்நுட்பம்தான் ரெடிமேட் ஸ்டீல். பொதுவாக இன்றைக்குள்ள கட்டிடங்களுக்கு ஆதாரமாக இருப்பது கான்கிரீட்தான். இந்த கான்கிரீட்டின் ஆதாரத்திற்கு அடிப்படை கட்டுமானக் கம்பிகள்தாம். இந்தக் கம்பிகளைக் கட்டுவது அதிக உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் வேலை. முதலில் கட்டுமானத்திற்கான இரும்புக் கம்பிகளை வாங்கி வந்து கட்டிடத்திற்கு ஏற்றவாறு அதை வெட்டி, வளைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள இட நெருக்கடியில் இந்த மாதிரி வேலைகளுக்கு இடவசதி தேவைப்படும். இரண்டாவது கம்பிகளைக் கொண்டுவந்து சேர்க்க, அவற்றை வளைத்துக் கட்டவும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இந்த மாதிரியான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் மிக எளிதாகக் கம்பிகளைக் கட்ட இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது.
“கட்டுமானத்திற்குரிய விவரங்களை அதாவது Bar Bending Scheduleஐ எங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டால் அதற்குத் தகுந்தவாறு கம்பிகளை நாங்களே வளைத்து கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே அனுப்பிவிடும். அதை அப்படியே இறக்கி சிமெண்ட் கலவைகளை இட்டாலே போதுமானது” என்கிறார் ஜிகேஎஸ் ரெடிமேட் ஸ்டீல்ஸ் என்ற பெயரில் ரெடிமேட் ஸ்டீல்களை உருவாக்கிவரும் வாசுதேவன்.
இந்தத் தொழிலில் ஆறு ஆண்டு காலமாகச் செயல்பட்டுவரும் வாசுதேவன் இதற்காக மென்பொருட்களை உபயோகித்து கம்பிகளைத் தேவைக்கு ஏற்ப நுட்பமாகவும் கச்சிதமாகவும் உருவாக்கிவருவதாகச் சொல்கிறார். “இந்த முறையின் மூலம் கட்டிடச் செலவை ஓரளவு குறைக்க முடியும். பழைய முறைப்படி கட்டிடப் பணிகள் நடக்கும் சைட்டிலேயே கம்பிகளை வெட்டுவதால் நிறைய கம்பிகள் வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பழைய முறையில் 5 சதவீதம் வீணாகும் எனக் கொண்டால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் 1.5 சதவீதம்தான் வீணாகும்” என்கிறார் அவர்.
பழைய முறையில் ஒரு கட்டிடக் கட்டுமானத்திற்கான கம்பிகளை நம்மால் உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும். அதனால் கம்பிகள் கட்டுமானத்திற்குப் பிறகு மிஞ்சி வீணாகவும் வாய்ப்புண்டு. இந்தப் புதிய முறையில் ரெடிமேட் கம்பி கொடுக்கும் நிறுவனமே அதை உருவாக்கித் தருவதால் கம்பி வீணாவதும் தடுக்கப்படும்.
கட்டிடப் பணியிடத்திலேயே வேலையை மேற்கொண்டால் அது மற்ற வேலைகளுடன் ஒரு பகுதி வேலை என்பதால் அதற்குத் தனிக் கவனம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வேலை அவர்களைப் பொறுத்தவரை தனியானது. அதனால் அதைச் சிறப்பாகவும் கவனமாகவும் செய்வார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாகக் கம்பிகள் கிடைக்கும். ஒப்பீட்டளவில் பார்த்தால் விலையும் சிக்கனம்தான். கம்பிகளை வெட்ட, வளைக்க, கட்ட வேலையாட்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

No comments:

Post a Comment