Saturday 21 June 2014

மணல் விலை மேலும் குறையுமா?


புதிய மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாலும் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையாலும் மணல் விலை சரிந்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் மணல் விலை சதுர அடிக்கு 70 ரூபாயிலிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சதுர அடிக்கு 50 ரூபாயில் இருந்து 55 ரூபாய்க்குள் ஏற்றமும் இறக்கமுமாக இருந்துவருகிறது. தமிழக அரசு திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஊர்களில் புதிய மணல் குவாரிகளைத் தொடங்கியதும் மணல் விலை சரியத் தொடங்கியது.

“மணல் விலை சில இடங்களில் சதுர அடிக்கு 60 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது பரவாயில்லை. நாங்கள் ஆற்றிலிருந்து மணல் லோடு எடுக்க 24 மணி நேரத்திற்குக் குறைவான கால நேரம் ஆகிறது. ஆனால் இன்னும் நாங்கள் டீசலுக்கு அதிகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது” என்கிறார் மணல் விற்பனை முகவரான எஸ்.எஸ். மணி. இதனால் இப்போதுள்ள விலைக்கு மணலை விற்க முடியாத நிலையிலுள்ளனர். அதாவது அவர்களுக்கு 4 யூனிட்டுக்கு 20 ஆயிரத்திற்கு விற்க முடியாத நிலை. இது சென்ற ஆண்டு 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
மார்ச் மாத மத்தியில் தமிழக அரசு இரு மாவட்டங்களில் மணல் குவாரிகளைத் திறந்துள்ளது. அதிகரித்துவரும் மணல் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து மணல் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு குவாரியில் இருந்தும் தினமும் 150 லாரிகளில் மணல் எடுக்கப்படுகிறது.
சில கட்டுமானப் பொறியாளர்கள் இங்கிருந்து பெறப்படும் மணலின் தரம் குறித்துப் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் சிமெண்ட் பூச்சுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. “வெகு தொலைவான மணல் குவாரிகளில் இருந்து வரும் மணல் லோடுகள் உண்மையிலேயே தரமற்றதாகத்தான் உள்ளன. ஆனால் முழுவதும் கட்டுமானத்திற்கு ஏற்றவை எனச் சொல்ல முடியாது” என்கிறார் பொறியாளர் எல்.ஆர்.குமார்.
பருவெட்டு மணல் செங்கல் இணைப்பிற்கு மட்டுமே ஏற்றவை. மெல்லிய ஆற்று மணல்தான் மேல் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும். மணல் குவாரிகளில் இருந்து வரும் மணல்களில் தரமற்றதன்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனக் கட்டுமானச் சங்கப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். மணல் விலை குறைந்ததற்கு முக்கியமான காரணம் மணல் தேவை குறைந்திருப்பதே. மேலும் மணல் விலை குறையும் எனப் பல கட்டுமான நிறுவனங்கள் நினைக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment