Tuesday 24 June 2014

செங்கலுக்கு மாற்றான ஏ.சி.சி. கற்கள்


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் புதிது புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் களம் அமைத்துத் தந்தது. கட்டுமானத் துறையிலும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் ஏ.சி.சி. கற்கள் (Autoclaved Aerated Concrete Blocks). 1924-ம் ஆண்டு ஜோகன் ஆக்செல் எரிக்ஸன் என்னும் சுவீடன் நாட்டுக் கட்டிடக் கலை வல்லுநர் இதைக் கண்டுபிடித்தார். அந்தக் காலத்தில் மரங்களே கட்டுமானப் பொருளாக அதிகமாகப் பயன்பட்டுவந்தன. அதற்கு மாற்றாக ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அவர் இந்த ஏ.சி.சி. கற்களைக் கண்டுபிடித்தார். இந்த வகைக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே பெரும் வரவேற்பைப் பெற்றன.
சாம்பல் (அல்லது கிரானைட் துகள்கள்), ஜிப்ஸம், சிமெண்ட் ஆகியவற்றுடன் நீர் கலந்து ஒரு கலவை முதலில் உருவாக்கப்படுகிறது. இந்தக் கலவையுடன் 0.05 சதவீதத்திலிருந்து 0.08 சதவீத அளவுக்கு அலுமினியப் பவுடர் கலக்கப்படுகிறது. நம்முடைய நாட்டில் அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் அதிகப்படியான சாம்பல் கழிவுகளை ஏ.சி.சி. கற்கள் தயாரிப்பில் கிரானைட் துகள்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள்.
கலவையுடன் அலுமினியப் பவுடர் இணைந்து வேதிவினை புரிவதால் கலவையின் எடை குறைகிறது. அலுமினியக் கலவையில் உள்ள கால்சியம் ஹைட்ராக்ஸைடுடன் நீர் வேதிவினை புரிந்து ஹைட்ரஜனை உண்டாக்குகிறது. இந்த ஹைட்ரஜன் வாயுவால் கலவையில் 3 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட குமிழ்கள் உண்டாகின்றன. மறுபடியும் மேற்கொள்ளப்படும் தயாரிப்பு முறையில் ஹைட்ரஜன் வாயு வெளியேறி, அந்தத் துளைகளில் காற்று வந்து அடைந்துகொள்கிறது. இந்தக் காற்றுக் குமிழ்களால் கலவையின் எடை குறைந்துவிடுகிறது.
அடுத்ததாக லேசாக்கப்பட்ட கலவை ஆட்டோகிளைவ் சேம்பரில் வைக்கப்பட்டு 190 டிகிரி வெப்பநிலையில் நீராவி செலுத்தப்படுகிறது. கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் சிலிகா ஹைட்ரேட் ஆக மாறி, உறுதியாகிறது.
முதலில் ஐரோப்பாவில் மட்டும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட இந்த வகைக் கற்கள், இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சீனா, இஸ்ரேல், அமெரிக்காவிலும் இந்த வகைக் கற்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகைக் கற்கள் செங்கல்லைக் காட்டிலும் மிகவும் எடை குறைவானது. அதாவது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடை உடையது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் கட்டப்படும் பல அடுக்குக் கட்டிடங்களுக்கு எடை மிகக் குறைவாக இருப்பதால் இந்த வகைக் கற்கள் ஏற்புடையதாக இருக்கும். கையாள்வதற்கும் எளிது என்பதால் பணிகள் மிக விரைவாக நடப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இக்கற்களை எளிதாக உடைக்கலாம், துளையிடலாம். அதனால் வயரிங், பிளம்பிங், டெகரேஷன் செய்வதும் சுலபம். இன்றைய சுற்றுச் சூழலுக்கு ஏற்றவகையில் ஏ.சி.சி. கற்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டு கட்டப்படுகின்றன.
நுண் துகளுடைய (Porous Structure) இதன் கட்டமைப்பு ஏ.சி.சி. கற்களுக்கு எளிதில் தீப்பிடிக்காத தன்மையைத் தருகின்றன. பாரம்பரியமாகப் பயன்பட்டுவரும் செங்கல் போல் கட்டுமானத்திற்குத் தகுந்தவாறு உடைக்க வேண்டிய அவசியமல்ல. மேலும் அப்படிச் செங்கல்லை உடைக்கும்போது வீணாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இந்த வகைக் கற்களை எளிதாகக் கட்டுமானத்திற்குத் தகுந்தவாறு வெட்டிக் கொள்ளலாம், கல்லும் வீணாகாது.
ஏ.சி.சி. கற்கள் அறையின் வெப்பத்தையும் குளிரையும் சமநிலையில் வைத்திருக்கும். லேசான எடை உள்ளதாக இருப்பினும் இந்தக் கற்கள் உறுதியானவை. அதனால் மழை நீர் கசிவு ஏற்பட வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment